டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
|டிசம்பர் 1 முதல் 20 வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு டிக்கெட்டு காலை 10 மணிக்கு வெளியாகும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்துக்கான தரிசன முன்பதிவு டிக்கெட் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டிசம்பர் 1 முதல் 20 வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
https://tirupatibalaji.ap.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று பக்தர்கள் தரிசன டிக்கெட்டை பதிவு செய்யலாம். தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள், குறிப்பிட்ட நாளில் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய வரவேற்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.