பெங்களூருவில், தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
|பெங்களூருவில் இ-மெயில் மூலம் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பசவேசுவராநகர்:
பெங்களூருவில் இ-மெயில் மூலம் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு பசவேசுவராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சானிகொரவனஹள்ளி மெயின் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் இ-மெயிலுக்கு ஒரு மிரட்டல் கடிதத்தை மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைத்திருந்தனர். நேற்று காலையில் பள்ளி திறந்ததும் இ-மெயிலை ஊழியர்கள் பார்த்தார்கள். அப்போது ஒரு கடிதம் வந்திருந்தது.அதில், பள்ளியின் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் எழுதப்பட்டு இருந்தது. இதை பார்த்து ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு, பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதே நேரத்தில் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்கள் பரவியதால் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பீதி அடைந்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
இதுபற்றி அறிந்ததும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் பசவேசுவராநகர் போலீசார் தனியார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பள்ளி வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். மோப்ப நாய் மூலமாக போலீசார், பள்ளியின் ஒவ்வொரு பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பள்ளியில் எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இது வெறும் புரளி என்பது தெரிந்தது. பள்ளிக்கு திட்டமிட்டு இ-மெயில் அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்தார்கள். இதன் காரணமாக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தார்கள்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி நிருபர்களிடம் கூறுகையில், பசவேசுவராநகரில் உள்ள தனியார் பள்ளியின் இ-மெயிலுக்கு நேற்று இரவு (நேற்று முன்தினம்) 8.28 மணியளவில் இ-மெயில் வந்திருந்தது. இன்று காலை (நேற்று) 11.30 மணியளவில் தான் இ-மெயில் வந்திருப்பதை ஊழியர்கள் பார்த்திருந்தனர். அந்த பள்ளியில் 950 பேர் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். இது திட்டமிட்டு விடுக்கப்பட்ட மிரட்டல் மட்டுமே. மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் யார்?, என்ன காரணத்திற்காக மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. பள்ளிக்கு வந்த இ-மெயில் முகவரி மூலமாக மர்மநபர்களை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பசவேசுவராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று பசவேசுவராநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.