சிவாஜிநகர் மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
|பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு, ஜூலை.7-
மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு சிவாஜிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அஜாம் மசூதி உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர், சிவாஜிநகரில் உள்ள அஜாம் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் மர்மநபர் கூறினார்.
அந்த நபர் தனது பெயர் விவரத்தை தெரிவிக்காமல் இணைப்பை துண்டித்து விட்டார். இதுபற்றி கட்டுப்பாட்டு அறை போலீசார், சிவாஜிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சிவாஜிநகர் போலீசார் விரைந்து சென்றனர். மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மசூதி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
மர்மநபருக்கு வலைவீச்சு
மசூதியின் ஒவ்வொரு பகுதியாக மோப்ப நாய் மோப்பம் பிடித்து ஓடியது. மசூதி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள். நள்ளிரவு வரை நடந்த இந்த சோதனையில் மசூதியில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் மசூதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் உண்மை இல்லை என்பதும், திட்டமிட்டே மர்மநபர் மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்தது.
மசூதியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்பது தெரியவில்லை. பெங்களூரு புறநகர் பகுதியில் இருந்து மிரட்டல் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண் மூலமாக மர்மநபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சிவாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.