பெங்களூருவில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
|மின்னஞ்சல் மூலம் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது இந்த பள்ளிக்கு வரும் 2-வது வெடிகுண்டு மிரட்டல் என கூறப்படுகிறது. இதனால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
தனியார் பள்ளி
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் உள்ளிட்ட சிலர் பணியில் இருந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது விரைவில் வெடித்து சிதற உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து பள்ளியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ஹெப்பகோடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பள்ளியை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களையும் உடன் அழைத்து வந்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள்
இதையடுத்து பள்ளியில் உள்ள அனைத்து அறைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், ஒரு இடம் விடாமல் தீவிர சோதனை செய்தனர். ஆனால் எங்கும் வெடிகுண்டு கிடைக்கவில்லை.
அப்போது தான் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது வெறும் புரளி என்பது தெரியவந்தது. ஆனால் அதை யார், எதற்காக அனுப்பி வைத்தனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டலுக்கு பின்னால் யார் உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதேபோல் ராஜாஜிநகர், பசவேஸ்வராநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கடந்த சில நாட்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து இருந்தன.