குண்டு வெடிப்புகள் எதிரொலி: காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் ராகுல்காந்தி பாதயாத்திரை
|காஷ்மீரில் குண்டு வெடிப்புகள் நடந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கிடையே ராகுல்காந்தி பாதயாத்திரை நடந்தது.
ஜம்மு,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம், கடந்த 19-ந் தேதி காஷ்மீருக்குள் நுழைந்தது. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வரவேற்றார். மறுநாள் நடந்த பாதயாத்திரையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவத் கலந்து கொண்டார்.
நேற்று முன்தினம் யாத்திரைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதே சமயத்தில், நேற்று முன்தினம் ஜம்மு புறநகரில் நர்வால் பகுதியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கரவாத செயலில் 9 பேர் காயம் அடைந்தனர்.
குண்டு வெடிப்புக்கு மறுநாளான நேற்று மீண்டும் பாதயாத்திரை நடந்தது. காலை 7 மணியளவில், கதுவா மாவட்டத்தில் ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையை ஒட்டி, சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ள ஹிராநகரில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.
குண்டு வெடிப்புகளை கருத்திற்கொண்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ராகுல்காந்தியை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர்.
ராகுல்காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் வானி, செயல் தலைவர் ராமன் பல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் நடந்து சென்றனர். காலை 8 மணியளவில் சம்பா மாவட்டம் தப்யால் கக்வால் பகுதிக்குள் யாத்திரை நுழைந்தது. இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.