ஒன்னாவர் அருகே பாறையில் மோதி நடுக்கடலில் மீன்பிடி படகு மூழ்கியது
|ஒன்னாவர் அருகே பாறையில் மோதி நடுக்கடலில் மீன்பிடி படகு மூழ்கியது. இதில் 14 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கார்வார்:
ஒன்னாவர் அருகே பாறையில் மோதி நடுக்கடலில் மீன்பிடி படகு மூழ்கியது. இதில் 14 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பாறையில் மோதியது
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த மீனவர்கள் 14 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எச்.எம்.அங்களூர் என்ற படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவர் கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் இருந்த பாறையில் படகு மோதியதாக தெரிகிறது.
இதனால் அடிப்பகுதி உடைந்து படகிற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த படகு நடுக்கடலில் மூழ்க தொடங்கியது.
14 மீனவர்கள் மீட்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் விரைந்து வந்து, மூழ்கி கொண்டிருந்த படகில் இருந்து 14 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு படகு நடுக்கடலில் மூழ்கியது. பின்னர் அவர்களை படகில் ஏற்றி ஒன்னாவருக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் காசர்கோடு துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுக்கடலில் படகு மூழ்க தொடங்கியதும் அருகில் இருந்த மீனவர்கள் விரைந்து வந்து செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 14 மீனவர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.