< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

பி.எம்.டி.சி. பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?; பயணிகள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
9 Oct 2022 2:55 AM IST

பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களில் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பி.எம்.டி.சி. பஸ்கள்

பெங்களூரு நகரம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. நகரில் தொழில்கள் கொட்டி கிடக்கிறது. இதனால் பெங்களூருவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வெளிமாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கும், பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கும் வருகிறார்கள். பயணிகள் வசதிக்காக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி) சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பெங்களூரு நகரில் பி.எம்.டி.சி. சார்பில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் குளிர்சாதன வசதிகள் கொண்ட சொகுசு பஸ்களும் அடங்கும். இந்த பி.எம்.டி.சி. பஸ்களை காலையில் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காலை, மாலை நேரங்களில் பி.எம்.டி.சி. பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு பயணிகளிடம் இருந்து மர்மநபர்கள் மணிபர்சுகளை திருடி செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.

செல்போன்கள் திருட்டு

இந்த நிலையில் சமீபகாலமாக பஸ்களில் திருடுபவர்கள் தங்களது பாணியை மாற்றி உள்ளனர். அதாவது மணிபர்சுகளுக்கு பதிலாக செல்போன்களை குறிவைத்து திருடி வருகின்றனர். பயணிகள் கவனத்தை திசைதிருப்பியோ அல்லது கூட்ட நெரிசலை பயன்படுத்தியோ அல்லது வேறு வழியிலோ பயணிகளிடம் இருந்து மர்மநபர்கள் செல்போன் திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. பஸ்களில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காகவும் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 ஆயிரம் பி.எம்.டி.சி. பஸ்கள் ஓடும் நிலையில் சுமார் 1,500 பஸ்களில் தான் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் பஸ்களில் பயணிகளிடம் திருட்டு நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பு பணம், தங்க நகைகளை மர்மநபர்கள் கைவரிசை காட்டி வந்தனர். தற்போது செல்போன்களை குறிவைத்து மர்மநபர்கள் ஜேப்படி செய்து வருகிறார்கள்.

இதுபற்றி பஸ் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:-

கேமரா வேலை செய்கிறதா?

பெங்களூரு பிரேசர் டவுனில் வசித்து வரும் புண்ணியகோடி:- "பி.எம்.டி.சி. பஸ்களில் முன்பு பயணிகளிடம் இருந்து மணிபர்சுகளை திருடி அதில் இருந்து பணத்தை எடுப்பார்கள். தற்போது பிக்பாக்கெட் அடிப்பதை விட்டுவிட்டு செல்போன்களை குறிவைத்து திருடி செல்கின்றனர். மணிபர்சில் பணம் இருந்தாலும் ரூ.100, ரூ.200 தான் இருக்கும். ஆனால் செல்போனை திருடி சென்றால் அதை விற்றால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும். அனைவரிடமும் செல்போன் உள்ளது. பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தான் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

மைசூரு ரோடு ஜனதா காலனியை சேர்ந்த செல்வி:- "நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போது கார்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல முடியாது என்று தான் பி.எம்.டி.சி. பஸ்களில் ஏழை, எளிய மக்கள் பயணித்து வருகிறார்கள். ஆனால் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு கும்பல் பயணிகளிடம் இருந்து தற்போது செல்போனை திருடி வருகிறது. கொஞ்சம் அயர்ந்தாலும் தங்கச்சங்கிலியை கூட பறித்து சென்று விடுவார்கள். பஸ்களில் கண்காணிப்பு கேமரா இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் கேமரா வேலை செய்கிறாதா என்றே தெரியவில்லை. அனைத்து பி.எம்.டி.சி. பஸ்களிலும் கேமரா பொருத்த வேண்டும். பயணிகளிடம் திருட்டு நடப்பதை தடுக்க கண்டக்டர்களும் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.

கண்டக்டர்கள் பொறுப்பு

சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த சிவா:- "பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடப்படுவதை தடுக்க கண்டக்டர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பஸ்களில் கண்டக்டர்கள் உட்கார்ந்து கொண்டே டிக்கெட் கொடுக்கிறார்கள். அவர்கள் பஸ்களுக்குள் அவ்வப்போது நடந்து செல்ல வேண்டும். சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் அவர்களிடம் கண்டக்டர்கள் விசாரிக்க வேண்டும். பொருட்கள் திருட்டு போனால் அதற்கு பயணிகள் தான் பொறுப்பு என்று கூறிவிட்டு தப்பிக்க முயல்வதை கைவிட வேண்டும். பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதற்கு கண்டக்டர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் மூலம் ஜேப்படி, செல்போன் திருட்டுகளை தடுக்க முடியும்" என்றார்.

போலீசார் ரோந்து வருவது இல்லை

மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வரும் செலுவா என்பவர் கூறியதாவது:-

பயணிகளிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்கும் வகையில் பி.எம்.டி.சி. பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடர்ந்து வருகிறது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ள பஸ்களில் பயணிகளிடம் திருட்டு நடந்தாலும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. கூட்டமாக இருக்கும் போது ஒன்றும் செய்ய முடியாது. பயணிகள் அதிகம் கூடும் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் அதிக திருட்டு நடக்கிறது. பஸ் நிலையத்தில் போலீசார் அடிக்கடி ரோந்து வருவது இல்லை. போலீசார் ரோந்து வந்தால் தான் திருடுபவர்களுக்கு பயம் வரும். பயணிகளிடம் திருடும் நபர்களை போலீசாரிடம் பிடித்து கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை. பயணிகள் தான் தங்களது பொருட்களை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். பயணிகள் கவனமாக இல்லாமல் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது குறை கூறினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்டக்டர்கள் சொல்வது என்ன?

பி.எம்.டி.சி.பஸ்களில் பயணிகளிடம் செல்போன் திருடப்படுவது குறித்து கேட்டதற்கு கண்டக்டர்கள் சிலர் கூறியதாவது:-

பஸ்களில் முன்பு ஜேப்படி சம்பவங்கள் அதிகமாக இருக்கும். தற்போது செல்போன்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. பயணிகளை பஸ்சில் ஏற்றுவது, பஸ் நிறுத்தங்களில் இறக்கி விடுவது, அனைவரும் டிக்கெட் எடுத்து உள்ளார்களா? என்று கவனிக்கவே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். கூட்டமாக இருக்கும் போது தான் பயணிகளிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். பயணிகளிடம் திருடிவிட்டு ஏதாவது பஸ் நிறுத்தம், சிக்னல்களில் இறங்கி சென்று விடுகிறார்கள். யார் திருடினார்கள் என்றே தெரிவது இல்லை. திருடிய நபர்களை எங்கே சென்று தேடுவது? யாரிடம் கேட்பது?. பஸ்களில் கூட்டமாக இருக்கும் போது பயணிகள் தான் தங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பது எங்களது கடமை இல்லை. பஸ்களில் நடைபெறும் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தலாம்.

இவ்வாறு கண்டக்டர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்