< Back
தேசிய செய்திகள்
குண்டுவெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - கேரள சுகாதாரத்துறை மந்திரி பேட்டி
தேசிய செய்திகள்

குண்டுவெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - கேரள சுகாதாரத்துறை மந்திரி பேட்டி

தினத்தந்தி
|
29 Oct 2023 5:07 PM IST

குண்டுவெடிப்பில் உயிரிழந்த நபர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கேரள சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியுள்ள நிலையில், கேரள குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் கேரள டிஜிபி கூறியுள்ளார்.

இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் கூறுகையில், "குண்டுவெடிப்பு சம்பவத்தில் 52 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்த நபர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்