மும்பையில் முடிவுக்கு வரும் கருப்பு-மஞ்சள் டாக்ஸி-க்களின் சேவை: ஆனந்த் மகிந்திரா உருக்கமான பதிவு
|"காலி பீலி" எனப்படும் கருப்பு, மஞ்சள் டாக்ஸி பயணங்கள் இனிமையான பல நினைவுகளை கொண்டன என்று ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மும்பை,
உபேர் மற்றும் ஓலா வகை கார்களின் வருகைக்கு முன்பு, மும்பையில் "காலி பீலி" எனப்படும் கருப்பு, மஞ்சள் வகை டாக்ஸி சேவைகள் மும்பைவாசிகளின் போக்குவரத்து முறையாக இருந்தது. இந்த கருப்பு-மஞ்சள் டாக்சிகள் மும்பை வாசிகளின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தன. எண்ணற்ற இனிமையான நினைவுகளுடன் தொடர்புடையவை.
இருப்பினும், இன்றைய நிலவரப்படி, இந்த டாக்சிகள் மும்பையின் தெருக்களில் இருந்து விடைபெற்று, ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கின்றன. மும்பையின் அடையாளச் சின்னமான பிரீமியர் பத்மினி டாக்ஸி இறுதிப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் காலி-பீலி பயணங்கள் இனிமையான பல நினைவுகளை கொண்டன என்று ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர், தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில்,
"இன்று முதல், பிரீமியர் பத்மினி டாக்ஸிகள் மும்பையின் சாலைகளில் இருந்து மறைகின்றன. அவை நம்பமுடியாதது, சத்தமில்லாதது. பொருட்களை எடுத்துச் செல்லும் திறனும் அதிகம் இல்லை. ஆனால் அவை பழங்கால மக்களுக்கு, டன் கணக்கில் நினைவுகளை சுமந்தன.
மேலும் அவை எங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச்செல்லும் வேலையைச் செய்தன. நல்ல தருணங்களுக்கு நன்றி." இவ்வாறு அதில் அவர் பகிர்ந்துள்ளார்.