400 தொகுதிக்கு மேல் வெற்றி என்ற பா.ஜ.க.வின் முழக்கம் வெறும் கற்பனையே - சசி தரூர்
|ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு பீகார், மேற்கு வங்காளம், குஜராத் போன்ற மாநிலங்களில் சென்ற தேர்தலைப்போல வெற்றி கிடைக்காது என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி புனே, மும்பை, கோவா உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ராஜஸ்தான், அரியானா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு பீகார், மேற்கு வங்காளம், குஜராத் போன்ற மாநிலங்களில் சென்ற தேர்தலைப்போல வெற்றி கிடைக்காது. பா.ஜனதா கோட்டை என்று கூறப்படும் இடங்களில் ஓட்டை விழுந்துவிட்டது. மேற்கண்ட இடங்களில் வாக்கு சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த 2019-ல் நடந்த தேர்தல், மோடி அரசின் முதல் 5 ஆண்டு கால பொருளாதார தோல்வி குறித்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால், புல்வாமா தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் ஆகியவை காரணமாக அது இந்தியாவின் பாதுகாப்பு குறித்த தேர்தலாக மாறியது.
இதன் விளைவாக, 11 மாநிலங்களில் பா.ஜனதா கூடுதல் வெற்றியை பெற்றது. அதேபோன்ற வெற்றியை பா.ஜனதா இந்த முறை பெற முடியாது. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என பா.ஜனதா பேச தொடங்கியபோதே, இது முழுக்க முழுக்க கற்பனை என்பது தெளிவாக தெரிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.