சீக்கியர் குறித்து பேச்சு: ராகுல் காந்தி வீட்டின் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவின் சீக்கிய அமைப்பினர் கூறியுள்ளனர்.
புதுடெல்லி,
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாஷிங்டன்னில் நடைபெற்ற கூட்டத்தில் சீக்கியர்கள் குறித்து பேசினார்.
சில மதங்கள், மொழிகள், சமூகங்களை ஆர்.எஸ்.எஸ். மற்றவர்களைவிட தாழ்வாகப் பார்க்கிறது. இந்தியாவில் இதற்குத்தான் சண்டை நடக்கிறது. அரசியலுக்கானது அல்ல என்று பேசினார். மேலும் அங்கிருந்த சீக்கியர் ஒருவரிடம், 'இந்தியாவில், ஒரு சீக்கியர், தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா அல்லது குருத்வாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதற்கே சண்டை நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்' என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,
டெல்லியில் 10, ஜன்பத் பகுதியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டின் முன்பாக பாஜகவின் சீக்கிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவின் சீக்கிய அமைப்பினர் விக்யான் பவனில் இருந்து பேரணியாக சென்றனர். ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
மேலும் 1984 கலவரத்தில் சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் மீறி பேரணியில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.