< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதாவின் வெறுப்பு அரசியல் மணிப்பூரை எரித்துவிட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பா.ஜனதாவின் வெறுப்பு அரசியல் மணிப்பூரை எரித்துவிட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
15 Jun 2023 11:23 PM IST

மணிப்பூர் வன்முறைக்கு பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்பத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் மணிப்பூர் வன்முறைக்கு பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பாஜகவின் வெறுப்பு அரசியல் மணிப்பூரை 40 நாட்களுக்கும் மேலாக எரித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது.

பிரதமர் இந்தியாவை தோல்வியுறச் செய்துவிட்டு முற்றிலும் அமைதியாக இருக்கிறார். இந்த தொடர் வன்முறை சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிக் குழுவை மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும்.

இந்த 'நப்ரத் கா பஜாரை' மூடிவிட்டு மணிப்பூரில் உள்ள ஒவ்வொரு இதயத்திலும் 'மொஹபத் கி துகான்' திறப்போம்" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்