< Back
தேசிய செய்திகள்
ஆபரேஷன் லோட்டஸ் நடவடிக்கை தோல்வி: டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால்
தேசிய செய்திகள்

'ஆபரேஷன் லோட்டஸ்' நடவடிக்கை தோல்வி: டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
2 Sept 2022 3:13 AM IST

டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

புதுடெல்லி,

டெல்லியில் தனது தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசை கவிழ்ப்பதற்கு பா.ஜ.க. மேற்கொண்ட 'ஆபரேஷன் லோட்டஸ்' நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளதாக கெஜ்ரிவால் கூறி வந்தார். இதை நிரூபிக்கும் விதத்தில் அவர் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இந்த நம்பிக்கை தீர்மானம் கடந்த 29-ந்தேதி தாக்கலானது.

இதன் மீதான விவாதத்துக்கு பின்னர் நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக சபையில் ஆஜராகி இருந்த அனைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும் வாக்கு அளித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் விஜேந்தர் குப்தா, அபய் வர்மா, மோகன்சிங் பிஷ்ட் ஆகியோர் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, துணை சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எஞ்சிய பா.ஜ.க. உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சட்டசபையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசியபோது கூறியதாவது:-

அவர்களால் (பா.ஜ.க.) ஒரு எம்.எல்.ஏ.யைக்கூட டெல்லியில் வாங்க முடியவில்லை. எங்களுக்கு 62 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒருவர் சிறையில் உள்ளார். 2 பேர் வெளிநாட்டில் உள்ளனர். ஒருவர் சபாநாயகர். (நம்பிக்கை வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக ஆம் ஆத்மியின் 58 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.)

துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ. சோதனைகள் நடத்தியபின்னர் நடக்கவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் வாக்கு சதவீதம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டால் வாக்கு சதவீதம் மேலும் 2 சதவீதம் கூடும்.

மணிஷ் சிசோடியா வங்கி லாக்கரை சி.பி.ஐ. திறந்து பார்த்தது, ஆனால் அவருக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை கைது செய்ய சி.பி.ஐ.க்கு அழுத்தம் தருகின்றனர் என்று அவர் கூறினார்.

சட்டசபைக்கு வெளியே கெஜ்ரிவால் நிருபர்களிடம் பேசுகையில், "மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக கூடுதலாக எதையும் சி.பி.ஐ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் பிரதமர் நேர்மை சான்றிதழ் வழங்கி உள்ளார்" என குறிப்பிட்டார்.

70 இடங்களைக் கொண்டுள்ள டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்