< Back
தேசிய செய்திகள்
ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் பாஜகவின் நோக்கம் - ஜே.பி.நட்டா பேச்சு
தேசிய செய்திகள்

ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் பாஜகவின் நோக்கம் - ஜே.பி.நட்டா பேச்சு

தினத்தந்தி
|
6 Oct 2023 9:56 AM IST

ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் பாஜகவின் நோக்கம் என்று ஜே.பி.நட்டா கூறினார்.

பாட்னா,

பீகாரில் பா.ஜனதாவை வளர்த்த பழம்பெரும் தலைவர் கைலாஷ்பதி மிஸ்ராவின் 100-வது பிறந்தநாளையொட்டி, பாட்னாவில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள், குடும்ப ஆதிக்கம் நிறைந்தவையாக உள்ளன. சுயநலம் கொண்ட தலைவர்கள், முதலில் மாநில கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள். பிறகு அதை குடும்ப கட்சிகளாக மாற்றி விடுகிறார்கள். இதுதான் அவர்கள் பாணி. மாநில கட்சிகள் ஒரு குடும்பத்துக்கு கட்டுப்பட்டதாக இருப்பதுடன், கழுத்தளவு ஊழலில் சிக்கித் தவிக்கின்றன.

தற்போது மக்களின் மனநிலை மாறிவிட்டது. மாநில கட்சிகளை இனிமேலும் அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அதனால், வரும் நாட்களில், குடும்ப ஆதிக்கம் கொண்ட மாநில கட்சிகள் துடைத்து எறியப்படுவது உறுதி. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. புதிதாக தொடங்கப்பட்ட 'இந்தியா' கூட்டணியின் நோக்கம், ஊழலை ஊட்டி வளர்ப்பதும், ஊழலில் சிக்கிய அரசியல் குடும்பங்களை பாதுகாப்பதும்தான்.

ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் பா.ஜனதாவின் நோக்கம். மோடி அரசு கொண்டு வந்த திட்டங்களால், இதர பிற்படுத்தப்பட்டோர் பலன் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவதுடன், 2025-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்