< Back
தேசிய செய்திகள்
ராகுல்காந்தி மீது பா.ஜனதாவுக்கு பயம் அதிகரித்து விட்டது- துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
தேசிய செய்திகள்

ராகுல்காந்தி மீது பா.ஜனதாவுக்கு பயம் அதிகரித்து விட்டது- துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
7 Oct 2023 6:45 PM GMT

ராகுல்காந்தி மீது பா.ஜனதாவுக்கு பயம் அதிகரித்து விட்டது என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, அக்.8-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு பயம் அதிகம்

ராகுல்காந்தியை ராவணன் போன்று சித்தரித்து பா.ஜனதாவினர் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். அதுபற்றி எனது கவனத்திற்கும் வந்தது. வடஇந்திய மாநிலங்களில் ராவணன் பூஜை செய்து வணங்கும் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். நமது பண்பாடு, கலாசாரம் பற்றி பா.ஜனதாவினர் அறிந்து கொள்ளாமல் இருப்பதால் தான், பா.ஜனதாவினர் இவ்வளவு கீழ்மட்டமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை பாதயாத்திரைக்கு பின்பாகவும், இந்தியா கூட்டணி அமைந்த பின்பும் ராகுல்காந்தி மீதான பயம் பா.ஜனதாவினருக்கு அதிகரித்து விட்டது. அதனால் தான் ராகுல்காந்திக்கு 10 தலை இருக்கும் புகைப்படத்துடன் கூடிய புகைப்படத்தை பா.ஜனதாவினர் வெளியிடுகின்றனர். ராமாயணம் பற்றி பா.ஜனதாவினருக்கு முழுமையாக தெரியவில்லை.

தேர்தலில் தக்க பாடம்

பா.ஜனதாவினரின் இந்த செயலை கண்டித்து நாடு முழுவதும் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பெங்களூருவிலும் மந்திரி ராமலிங்கரெட்டி தலைமையில் போராட்டம் நடத்தப்படும். பா.ஜனதாவினர் என்ன செய்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தே தீரும். பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் உள்ள 9 வார்டுகளில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக எம்.எல்.ஏ.வே புகார் அளித்துள்ளார். அதனால் 9 வார்டுகளில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது.

கூடுதல் வரி விதிக்கப்படாது

பெங்களூருவில் போக்கு வரத்து நெரிசல் விவகாரத்தில் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஏற்கனவே அரசால் விதிக்கப்படும் சொத்து வரி உள்ளிட்டவற்றை நேர்மையாக மக்கள் செலுத்தினாலே போதுமானது. கூடுதலாக எந்த விதமான வரியையும் விதிக்கப்படாது. கூடுதலாக மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படாது என்று முதல்-மந்திரி கூறி இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் சில விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பரிசீலனை நடத்த வேண்டி உள்ளது. அதன்பிறகு, கூடுதல் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். சட்டசபை தேர்தலில் லிங்காயத் சமுதாயத்தின் ஓட்டுகள் தவிர காங்கிரசுக்கு அனைத்து சமுதாய மக்களும் வாக்களித்த காரணத்தால் தான், 135 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்