பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி
|பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
தான்பாத்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மாதம் 14-ந் தேதி மணிப்பூரில் பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்டம் துன்டியில் யாத்திரை முடிவடைந்தது. இரவு ஓய்வுக்கு பிறகு, நேற்று தான்பாத் நகரின் கோவிந்த்பூரில் யாத்திரை தொடங்கியது. அங்கு சாலை பேரணியாக அவர் சென்றார். சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
சாலை பேரணியில் பேசிய ராகுல்காந்தி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் நான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம், இளைஞர்களுக்கும், பழங்குடியினருக்கும் நீதியை உறுதி செய்வதும் எங்கள் நோக்கம் ஆகும்.
பழங்குடி மக்களின் தண்ணீர், வனம், நிலம் ஆகியவற்றை காங்கிரஸ் பாதுகாக்கும். இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பாடுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வேலையின்மை ஆகியவை நாட்டின் இளைஞர்களது எதிர்காலத்தை சீரழித்து விட்டன என்று அவர் பேசினார்.
பின்னர், பொகாரோ மாவட்டம் வழியாக, ராம்கார் மாவட்டத்தில் நேற்றைய யாத்திரை முடிவடைந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக 8 நாட்கள் யாத்திரை நடைபெறும். 13 மாவட்டங்கள் வழியாக 804 கி.மீ. தூரம் பயணம் செய்யும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.