தேர்தல் தகராறு: ஒடிசாவில் பா.ஜ.க. தொண்டர் பலி; 7 பேர் படுகாயம்
|ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஸ்ரீகிருஷ்ண சரணாபூர் கிராமத்தில் நேற்று இரவு தேர்தல் பிரசாரத்திற்காக போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இரு கட்சிகள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆளும் பிஜு ஜனதா தள ஆதரவாளர்களுக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில், பா.ஜ.க. தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"ஸ்ரீகிருஷ்ண சரணாபூர் கிராமத்தில் வேட்பாளர் ஒருவரின் போஸ்டர்களை ஒட்டுவதில் மோதல் ஏற்பட்டதால் இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியுள்ளனர். இதில், பா.ஜ.க. தொண்டர் திலிப் குமார் பஹானா (வயது 28) என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
இதனை தொடர்ந்து, கல்லிகோட் சட்டப்பேரவை தொகுதியின் பிஜு ஜனதா தள வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான சூர்யமணி பைத்யாவின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை பா.ஜ.க.வினர் அடித்து உடைத்தனர். மேலும், எம்.எல்.ஏ. சூர்யமணி பைத்யா மற்றும் அவரது கணவர் டெய்டரி பெஹராவை கைது செய்ய வேண்டும் என்று கூறி போலீஸ் நிலையம் அருகே பா.ஜ.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிடுள்ள பதிவில்,"கல்லிகோட் பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான இந்த வன்முறை சம்பவம் ஆழ்ந்த கவலையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு நமது ஜனநாயகத்திலும், சமூகத்திலும் இடமில்லை.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்கா தொகுதியின் கீழ் வரும் கல்லிகோட்டிற்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறவுள்ளது.