'மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்' - மத்திய மந்திரி கிஷன் ரெட்டி
|பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும் என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
ஐதராபாத்,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க. இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் மிகப்பெரிய கட்சியாகும். முன்னதாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உலகின் மிகபெரிய கட்சியாக இருந்து வந்தது. தற்போது பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், பா.ஜ.க. உலகின் மிகப்பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று 3-வது முறை பிரதமராக பதவியேற்பார். கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றி பெறும்.
முன்னதாக மன்மோகன் சிங் ஆட்சியின்போது பல மத்திய மந்திரிகள் ஊழல் வழக்குகளில் சிறைக்கு சென்றனர். ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழல் இல்லை. உலகிலேயே 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது அமைதி நிலவுகிறது. மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்தாலும், அவர்களிடம் எந்த திட்டமிடலும் இல்லை. தெலுங்கானா மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களித்து அவரை பலப்படுத்த வேண்டும்."
இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்தார்.