கர்நாடகத்தில் பா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் - பசவராஜ் பொம்மை
|கர்நாடகத்தில் பா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மக்களுக்கு தெரிவிப்போம்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். அப்படி என்றால் முதல்-மந்திரி மட்டுமல்ல, அவரது தலைமையிலான குழு மற்றும் கட்சி என்று அர்த்தம். நாங்கள் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற முயற்சி செய்வோம்.
தேர்தலை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். நாங்கள் இன்று (நேற்று) முதல் விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்குகிறோம். இதன் மூலம் வீடு வீடாக சென்று மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிப்போம்.
காங்கிரசார் முயற்சி
நாங்கள் எங்களின் பலத்தின் அடிப்படையில் வெற்றி பெறுவோம். காங்கிரசை தோற்கடிக்க அதே கட்சி தலைவர் ஒருவருக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரூ.500 கோடி பேரம் பேசியதாக காங்கிரஸ் கட்சியே குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி அக்கட்சியினர் தான் பதில் கூற வேண்டும். இதுகுறித்து நான் பேச ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தை மூடிமறைக்க காங்கிரசார் முயற்சி செய்வதாக தெரிகிறது. பா.ஜனதா 130 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.