குஜராத்: மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்- அமித் ஷா பேச்சு
|பாஜக ஆட்சியில் குஜராத் முன்னேற்றம் கண்டுள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறது. இதற்கு போட்டியாக காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி களத்தில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குஜராத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். காந்திநகரில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, முதல் மந்திரி பூபேந்திர படேலின் தலைமையை பாராட்டி, பாஜக ஆட்சியில் மாநிலம் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விழாவில் ஆம் ஆத்மி கட்சியை மறைமுகமாக சாடி அமித் ஷா பேசியதாவது:
செயலில் அல்லாது கனவுகளை மட்டுமே விற்பவர்கள் குஜராத்தில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள். குஜராத் மக்களை நான் அறிவேன். அவர்கள் பாஜக பக்கம் நிற்கிறார்கள். மாநிலத்தில் பாஜக அமோக வெற்றியை அடையும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசு, கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தில் வளர்ச்சியில் சாதனைகளை படைத்துள்ளது. கடந்த ஓராண்டில் குஜராத்தின் இந்த வளர்ச்சிப் பயணத்திற்கு பூபேந்திர படேல் புதிய ஆற்றலையும் வேகத்தையும் கொடுத்துள்ளார். அவரது பதவிக்காலத்தின் ஒரு வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள்.
குஜராத் மக்கள் பாஜகவுடன் இருக்கிறார்கள் என்பதை நான் பூபேந்திர படேல் கூற விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூபேந்திர படேல் தலைமையில் பாஜக மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வரவிருக்கும் தேர்தலில் ஆட்சி அமைக்கும் என்பதை நான் தெளிவாகக் காண்கிறேன்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.