< Back
தேசிய செய்திகள்
அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது - மம்தா பானர்ஜி
தேசிய செய்திகள்

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது - மம்தா பானர்ஜி

தினத்தந்தி
|
10 Nov 2022 12:01 PM IST

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்று மம்தா பானர்ஜி உறுதிபட தெரிவித்தார்.

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, அங்கு கிருஷ்ணாநகரில் நேற்று தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நெருங்கும்போதெல்லாம் குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்துவது பற்றி பா.ஜ.க. பேசுகிறது. மேற்கு வங்காளத்தில் இவற்றை ஒருபோதும் அமல்படுத்த விட மாட்டேன்.

குஜராத் சட்டசபை தேர்தல் வர உள்ளது. 1½ ஆண்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே மறுபடியும் இந்த விவகாரங்களை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது.

யார் குடிமகன், யார் குடிமகன் இல்லை என்பதை பா.ஜ.க. தீர்மானிக்குமா? மாதுவாக்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தான். இந்த மாநிலத்தின் வட பகுதிகளில் ராஜபன்சிகளையும், கூர்காக்களையும் தூண்டி விடுவதின்மூலம் பா.ஜ.க. பிரிவினையைத் தூண்டி விடுகிறது. மேற்கு வங்காள பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வராது. 2019-ம் ஆண்டு நிலவிய சூழ்நிலை வேறு. அப்போது பீகார், ஜார்கண்ட் என பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. தற்போது அதன் அரசியல் இருப்பு நாடு முழுவதும் குறைந்துள்ளது. பல மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியில் இல்லை. எனவேதான் அது எதிர்க்கட்சிகளை தாக்குகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து இழிவுபடுத்துகிறது.

கடந்த சில மாதங்களாகவே மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டப்பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

மாநிலங்களில் இருந்து ஜி.எஸ்.டி. பெயரால் பணத்தை அவர்கள் (மத்திய அரசு) எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் கூட்டாட்சி முறையில் நமது உரிமையான பணத்தை நமக்கு தருவதில்லை. அவர்கள் முன் நாம் தலைவணங்க மாட்டோம் என்பதால் இந்த யுக்திகள், அவர்களுக்கு தேர்தலில் உதவாது என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்