உத்தரவாத திட்டங்களை நிறைவேற்ற முடியாவிட்டால் ஆட்சியை விட்டு காங்கிரஸ் விலக வேண்டும்; பா.ஜனதா வலியுறுத்தல்
|உத்தரவாத திட்டங்களை நிறைவேற்ற முடியாவிட்டால் ஆட்சியை விட்டு காங்கிரஸ் விலக வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.
பெங்களூரு:
உத்தரவாத திட்டங்களை நிறைவேற்ற முடியாவிட்டால் ஆட்சியை விட்டு காங்கிரஸ் விலக வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.
கர்நாடக மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு வழங்குகிறது
மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார். கர்நாடகத்தில் 300 இடங்களில் அவரது உரையை ஒளிபரப்ப நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். மோடியின் உரைக்கு பிறகு அரசின் சாதனைகள் குறித்து வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பிரதமர் மோடி சாதனைகளை புரிந்துள்ளார்.
ரேஷன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. கொரோனா தடுப்பூசி வழங்கியது, சமையல் கியாஸ் இணைப்பு வழங்கியது, கழிவறைகளை கட்டி கொடுத்தது போன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது இல்லை. ஆனால் உத்தரவாத திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்கிறது. இதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள்.
உத்தரவாத திட்டங்கள்
மத்திய அரசு தான் 5 கிலோ அரிசி கொடுக்கிறது என்பதை நாங்கள் மக்களிடம் எடுத்துக் கூறுவோம். காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்த கோரி பா.ஜனதா சட்டசபைக்கு உள்ளேயும், பொது வெளியிலும் போராட்டம் நடத்தும். 10 கிலோ அரிசியை வழங்க தவறினால் சித்தராமையா பொய் பேசுவதில் முதன்மையானவர் என்பதை மக்களிடம் சொல்வோம்.
உத்தரவாத திட்டங்களை நிறைவேற்ற முடியாவிட்டால் காங்கிரஸ் ஆட்சியை விட்டு விலக வேண்டும். நாங்கள் தோல்வி அடைந்தது உண்மை தான். ஆனால் தோல்வி நிரந்தரமல்ல. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதன் மூலம் மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்குவோம். கட்சியின் மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை உரிய நேரத்தில் கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.