< Back
தேசிய செய்திகள்
அக்னிபத் மூலம் தங்களுக்கென ஆயுதக்குழுவை உருவாக்க பாஜக முயற்சி - மம்தா பானர்ஜி
தேசிய செய்திகள்

அக்னிபத் மூலம் தங்களுக்கென ஆயுதக்குழுவை உருவாக்க பாஜக முயற்சி - மம்தா பானர்ஜி

தினத்தந்தி
|
20 Jun 2022 8:47 PM IST

அக்னிபத் மூலம் தங்களுக்கென ஆயுதக்குழுவை உருவாக்க பாஜக முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

முப்படைகளில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர். இந்த திட்டத்தில் சேரும் வயது வரம்பு 17 முதல் 23 வரையாகும்.

அக்னிபத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அக்னி வீரர்களின் பணிக்காலம் 4 ஆண்டுகளாகும். 4 ஆண்டுகளுக்கு பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதிவும் வழங்கப்படாது. அதேவேளை, வீரர்களின் பணிக்காலத்தின்போது அவர்களுக்கான ஊதியமாகாக மொத்தம் 5 லட்ச ரூபாய் கிடைக்கும். ஓய்வுக்கு பின் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறி ரெயில்களுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. அதேவேளை, இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், மேற்குவங்காள சட்டசபையில் அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், அக்னிபத் திட்டம் மூலம் தங்களுக்கென ஆயுதக்குழுவை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு பின் என்ன செய்வார்கள்? இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை கொடுக்க பாஜக நினைக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பாஜக வாக்குறுதியளித்தது. ஆனால், தற்போது பல்வேறு திட்டங்களின் பெயரில் பாஜக நாட்டு மக்களை ஏமாற்றுகிறது' என்றார்.

மேலும் செய்திகள்