டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பா.ஜ.க. முயற்சி... சட்டசபையில் சரமாரி குற்றச்சாட்டு
|கைது செய்யப்பட்ட முதல்-மந்திரி கெஜ்ரிவாலை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ.க. முயற்சி செய்ததாக எம்.எல்.ஏ. மதன் லால் கூறினார்.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவருக்கு 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி தனது பணிகளை கவனித்து வருகிறார். கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு பா.ஜ.க.தான் காரணம் என ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். இதனை பா.ஜ.க. மறுத்து வருகிறது. இந்த விவகாரம் டெல்லி சட்டசபையிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், டெல்லி சட்டசபை கூட்டத்தில் இன்று இந்த விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டது. 'டெல்லியில் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயற்சிகள்' என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினர்.
கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ.க. முயற்சி செய்ததாக எம்.எல்.ஏ. மதன் லால் கூறினார்.
"சிறையில் இருந்துகொண்டு ஆட்சி நடத்த கெஜ்ரிவாலை அனுமதிக்க மாட்டோம் என்று துணைநிலை ஆளுநர் கூறுகிறார். இதன்மூலம் அவசர நிலை போன்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியை அச்சுறுத்துவதற்காக ஜனாதிபதி ஆட்சி தொடர்பான வதந்திகள் பரப்பப்படுகின்றன" என்றும் மதன் லால் கூறினார்.
சிறையில் இருந்து ஆட்சி நடத்தக்கூடாது என டெல்லி முதல்-மந்திரியை எந்த சட்டமும் தடுக்கவில்லை என சில எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.
டெல்லி சட்டசபை கலைக்கப்படும் என்ற பீதியை சிலர் உருவாக்கி வருவதாகவும், அதற்கான அரசியலமைப்பு நெருக்கடி எதுவும் இல்லை என்றும் மற்றொரு எம்.எல்.ஏ. பூபிந்தர் சிங் ஜூன் பேசினார். முதல்-மந்திரியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வின் அழுத்தங்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அடிபணியாது என்றும், கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக தொடர்வார் என்றும் மற்றொரு எம்.எல்.ஏ. அகிலேஷ் பதி திரிபாதி கூறினார்.