தொட்டு வணங்க முயன்ற பா.ஜ.க. எம்.பி.யை பின்னங்காலால் உதைத்த பசு
|ஆந்திர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.பி. ஒருவர் பசுவை தொட்டு வணங்க முயன்றபோது, அது பின்னங்காலால் உதைத்த சம்பவம் நடந்து உள்ளது.
குண்டூர்,
ஆந்திர பிரதேசத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த மேலவை எம்.பி.யாக இருப்பவர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ். இந்நிலையில், சமையலுக்கு பயன்படும் காய்ந்த மிளகாய்கள் விற்பனை குண்டூரில் பெரிய அளவில் நடைபெறும். இதனால், மிளகாய் வத்தலின் வர்த்தக மையம் ஆகவும் அந்நகரம் உள்ளது.
இதனை முன்னிட்டு நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள நரசிம்ம ராவ் குண்டூருக்கு சென்றுள்ளார். ஆதரவாளர்களுடன் சென்ற அவர் அந்த பகுதியில் உள்ள பசு ஒன்றை தொட்டு வணங்க முயற்சித்து உள்ளார்.
ஆனால், அந்த பசு அவரை நெருங்க விடவில்லை. அதற்கு பதிலாக, அவரை பின்னங்காலால் உதைத்து, விரட்டியுள்ளது. இதனால், மிரண்டு போன அவர் சிறிது நேரம் கழித்து, மீண்டும் பசுவை நெருங்கியுள்ளார். அதன் உரிமையாளரும் பசுவை பிடித்து கொண்டார்.
எனினும், இந்த முறையும் பசு குறிப்பிட்டு அவரை நோக்கி, பின்னங்காலால் உதைத்து உள்ளது. இதில், அவரது கை மேல், பசுவின் கால் தொடுவது போன்று நெருங்கி சென்றுள்ளது. சற்று அதிர்ச்சியடைந்த எம்.பி. பின்னர் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டார். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.