கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது? முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
|கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தங்களது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல் தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
சட்டசபை தேர்தல்
சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் கட்சியான பா.ஜனதா, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அறிவிக்கப்படாத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜனதா கட்சியினர் விஜய சங்கல்ப யாத்திரை என்ற பெயரிலும், காங்கிரஸ் கட்சியினர் பிரஜாத்வானி யாத்திரை என்ற பெயரிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பஞ்சரத்னா என்ற பெயரிலும் யாத்திரை மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இதுஒருபுறம் இருக்க ஆளும் கட்சியான பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அக்கட்சியின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்துக்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அடிக்கடி கர்நாடகத்துக்கு வந்து மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்கள். பிரதமர் மோடி 7 முறை கர்நாடகத்துக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும் ரோடு ஷோ, பொதுக்கூட்டம் நடத்தி மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.
காங்கிரஸ் கட்சி
இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) கட்சி தங்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் 93 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது. அதுபோல் நேற்று முன்தினம் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் தங்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் 124 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், கே.எச்.முனியப்பா உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆளும் பா.ஜனதா கட்சி இதுவரை தனது கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இதனால் கட்சி நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டு காத்திருப்பவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முடிவு எடுக்கவில்லை
கர்நாடகத்தில் தலித் உள்பட பல்வேறு சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம் என்று பலர் என்னிடம் கூறினர். ஆனால் நாங்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள தலித் பிரிவுகளுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். இந்த இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அதுபற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.
இட ஒதுக்கீடு விஷயத்தில் பா.ஜனதா அரசால் முடிவு எடுக்க முடியாது என்று கூறினர். ஆனால் எங்களுக்கு அர்ப்பணிப்பு உறுதி உள்ளது. அதனால் நாங்கள் தலித் சமூகத்தில் உள்ள சிறிய பிரிவுகளுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுத்துள்ளோம். இது தொடர்பாக அறிக்கை பெற்று மந்திரிசபை துணை குழுவை அமைத்து சட்டப்படி முடிவு எடுத்து இருக்கிறோம்.
மரியாதை கூடாது
காங்கிரசார், பா.ஜனதாவினர் செய்த பணிகளை பார்த்து பொறாமையால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அவர்களின் பேச்சுக்கு மரியாதை கிடையாது. காங்கிரசார் தலித் மற்றும் பழங்குடியின மக்களை ஏமாற்றியே வந்துள்ளனர். இது தான் அவர்கள் வந்த பாதையின் வரலாறு. நாங்கள் சமூக, வளர்ச்சி, அமைப்புகளின் கோரிக்கை ஆகிய எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளோம்.
இட ஒதுக்கீடு குறித்து பட்டியலை வெளியிட உள்ளோம். முஸ்லிம்களை 10 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்த்துள்ளோம். அதனால் அவர்களுக்கு அநீதி ஏற்படாது. சிறுபான்மையின மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பா.ஜனதா அரசின் சாதனை புத்தகத்தை விரைவில் வெளியிடுவோம். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலும், மகதாயி திட்ட டெண்டர் நடைமுறைகள் தொடர்ந்து நடைபெறும். அதற்குள் வனத்துறையின் அனுமதி கிடைத்தால், அந்த திட்ட பணிகள் தொடங்கப்படும். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சரியான நேரத்தில் பட்டியல் வெளியாகும். இதுகுறித்த அறிவிப்பை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.