கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக 23-ந் தேதி பா.ஜனதா போராட்டம் - எடியூரப்பா அறிவிப்பு
|கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக வருகிற 23-ந் தேதி பா.ஜனதா போராட்டம் நடத்தும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
எடியூரப்பா ஆலோசனை
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர போவதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் பணிகளில் ஈடுபடும்படி முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எடியூரப்பா உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
வருகிற 23-ந் தேதி போராட்டம்
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து 3 மாதங்கள் ஆகிறது. அரசு அமைந்ததில் இருந்து மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. அதிகாரிகள் இடமாற்றம், ஊழலில் ஈடுபடுவதை மட்டுமே வேலையாக கொண்டுள்ளனர். வளர்ச்சி பணிகளின் மீது அரசு கவனம் செலுத்துவதே இல்லை. காங்கிரஸ் அரசு ஊழலில் மூழ்கி போய் விட்டது. வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் ஊழலில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். ஊழலை கைவிட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாவிட்டால், காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் தீவிர போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.