< Back
தேசிய செய்திகள்
குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாமல் இருக்க பா.ஜ.க. பேரமா? கெஜ்ரிவால் குற்றச்சாட்டால் பரபரப்பு
தேசிய செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாமல் இருக்க பா.ஜ.க. பேரமா? கெஜ்ரிவால் குற்றச்சாட்டால் பரபரப்பு

தினத்தந்தி
|
5 Nov 2022 11:16 PM IST

குஜராத் சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடாமல் இருக்க பா.ஜ.க. பேரம் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் களம்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

டிசம்பர் 1, 5-ந் தேதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

இங்கு 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றி பெற துடிக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது.

இந்த நிலையில், புதிதாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி கட்சியையும் இந்த தேர்தல் களத்தில் இறக்குகிறார். எனவே இப்போதே தேர்தல் களத்தில் சூடு பறக்கத்தொடங்கி உள்ளது.

பா.ஜ.க. பேரம்

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் டெல்லி முதல்-மந்திரி ஆக்குவதாகக்கூறி மணிஷ் சிசோடியாவிடம் பா.ஜ.க. பேரம் பேசியது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இந்த நிலையில், அந்தக் கட்சியினர் இப்போது என்னை நாடினார்கள். குஜராத் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாமல் விலகிக்கொண்டால், நாங்கள் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகிய இருவரையும் விட்டு விடுகிறோம். அவர்கள் மீதான எல்லா வழக்குகளையும் கைவிட்டு விடுகிறோம் என பேரம் பேசினார்கள்.

யார் மூலம் பேரம்?

யார் இந்த பேரத்தை பேசியது என கேட்கிறீர்கள். எனக்கு சொந்தமான ஒருவரின் பெயரையே.... நான் எப்படி சொல்ல முடியும்? அவர்கள் மூலமாகவே பேரம் வந்தது... பாருங்கள்... அவர்கள் நேரடியாக என்னை அணுகவில்லை. அவர்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு, இன்னொருவருக்கு, இன்னொருவருக்கு என வந்து கடைசியில் ஒரு நண்பர் வழியாக வந்தார்கள். பின்னர் செய்தி உங்களுக்கு வந்தடைகிறது.

தோல்வி பயம்

குஜராத் சட்டசபை தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் தோற்றுவிடுவோம் என்று பா.ஜ.க.வுக்கு பயம் வந்து விட்டது. எங்கள் கட்சியைத் தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளனர்.

மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் என எங்கள் கட்சித்தலைவர்கள் இருவர் மீதும் போடப்பட்ட வழக்குகள், ஜோடிக்கப்பட்ட வழக்குகள் ஆகும்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த அரசை ஆம் ஆத்மி கட்சி அமைக்கும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும்.

எங்கள் கட்சி ஏற்கனவே 2-வது கட்சியாக முன்னிலை பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க.வையும் பின்னுக்கு தள்ளி விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்