சுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது: உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
|ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீநகர்,
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது. இதன்படி வரும் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், 25-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த சூழலில் கண்டர்பால் தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "காஷ்மீரில் எவ்வளவு சுயேச்சைகளை வெற்றி பெறச் செய்ய முடியுமோ அவ்வளவு சுயேச்சைகளை வெற்றி பெற வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. இதனால் தங்கள் அரசாங்கத்தை அமைக்கள் அவர்கள் (பா.ஜ.க.) முயற்சிக்கிறார்கள். வாக்காளர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள், தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது பா.ஜ.க.வோ அல்லது அவர்களின் சூழ்ச்சிகளோ வெற்றி பெற்றிருக்காது" என்று உமர் அப்துல்லா கூறினார்.