வரும் மக்களவை தேர்தல் வம்ச அரசியலுக்கு முடிவு கட்டும்.. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பா.ஜ.க. பதிலடி
|கார்கே கூறியதன் பின்னணியில் நாட்டில் அமைதியைக் குலைக்கும் தீய எண்ணம் உள்ளது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு கிடைக்கும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். மேலும், அடுத்து பா.ஜ.க. வெற்றி பெற்றால், நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கும், ரஷ்யாவில் புதின் போன்று இந்தியாவை பா.ஜ.க. ஆட்சி செய்யும் என்றும் கார்கே பேசியிருந்தார்.
இதற்கு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஜனநாயகம் என்ற போர்வையில் நடக்கும் வம்ச அரசியல் முடிவுக்கு வரப்போகிறது. தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் கார்கே, முற்றிலும் ஆதாரமற்ற, பொறுப்பற்ற மற்றும் ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதன் பின்னணியில் நாட்டில் அமைதியைக் குலைக்கும் தீய எண்ணம் உள்ளது. குடும்பம் சார்ந்த அரசியலை காப்பாற்ற முயலும் ராஜவம்சம், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தனது இருண்ட எதிர்காலத்தை நினைத்து அஞ்சுகிறது.
கார்கே என்ன சொன்னாலும் சரி, உண்மையான அர்த்தம் ஜனநாயகம் என்ற போர்வையில் உள்ள வம்ச அரசியல் கடந்த தேர்தலில் வாக்காளர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. உண்மையான ஜனநாயகத்தின் உண்மையான தோற்றம் விரைவில் வெளியாகும். நாட்டில் வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகிய இரண்டு பிரதமர்கள் மட்டுமே ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். காங்கிரஸ் கட்சி எத்தனையோ பிரதமர்களை கொடுத்தது, ஆனால் ஒருவர் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.