"பிரதமர் மோடியை சிறையில் அடைப்போம்" : லாலு மகள் தேர்தல் பிரசாரம் - பா.ஜனதா கண்டனம்
|இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்களை சிறையில் அடைப்போம் என்று மிசா பாரதி கூறினார்.
புதுடெல்லி,
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனரும் பீகார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் லாலு பிரசாத் யாதவ். இவருடைய மகள் மிசா பாரதி. நாடாளுமன்ற தேர்தலில் பாடலிபுத்திரம் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். பிரசாரத்தின்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்களை சிறையில் அடைப்போம் என அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் இவருடைய கருத்துக்கு பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அந்தமான் தீவுகளில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது, "பிரதமர் மோடி நாட்டின் தலைமை நிர்வாகியாகவும் மாநில முதல்-மந்திரியாக 23 ஆண்டுகள் பணியாற்றினார். இத்தனை ஆண்டுகளில் அவர் மீது எவ்வித குற்றச்சாட்டுகளோ, களங்கமோ கிடையாது. ஆனால் ஊழல் வழக்குகளில் கைதாகி வெளியே வந்தவர்கள் எல்லாம் பிரதமர் மோடியை கைது செய்வோம் என மிரட்டுகிறார்கள்" என்றார்.
மேலும் மிசா பாரதியின் மிரட்டலுக்கு பா.ஜனதா தேசிய பொது செயலாளர் வினோத் தவாடே, மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.