< Back
தேசிய செய்திகள்
மேகதாது திட்டத்திற்கு பா.ஜனதா அனுமதி பெற்று கொடுக்க வேண்டும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

மேகதாது திட்டத்திற்கு பா.ஜனதா அனுமதி பெற்று கொடுக்க வேண்டும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
8 Sept 2023 12:15 AM IST

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது திட்டத்திற்கு பா.ஜனதா அனுமதி பெற்று கொடுக்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது மேகதாது திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தினோம். அதன் பிறகு முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை அந்த திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கினார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை பெறாதது ஏன்?. முதலில் இந்த பணியை பா.ஜனதாவினா் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு மதிப்பு இருக்கும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது திட்டத்திற்கு பா.ஜனதா அனுமதி பெற்று கொடுக்க வேண்டும்.

பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி கடிதம் எழுதியுள்ளோம். நேரம் கிடைத்ததும் அனைத்துக்கட்சி குழுவினருடன் சென்று பிரதமரை சந்தித்து பேசுவோம். செய்தியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் தேவையின்றி போராட்டம் நடத்துகிறார்கள். தண்ணீர் விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். குடிநீருக்கு தான் நாங்கள் முதல் முன்னுரிமை அளிப்போம்.

கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை நடைபெற்று இன்றுடன் (நேற்று) ஓராண்டு ஆகிறது. இதன் நினைவு நாள் நிகழ்ச்சி ராமநகரில் நடக்கிறது. குமாரசாமியும், சி.பி.யோகேஷ்வரும் ஒன்றாக சேருகிறார்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். பா.ஜனதாவை சேர்ந்த சிவராம் ஹெப்பார் எம்.எல்.ஏ. என்னை நேரில் சந்தித்து சில பணிகளை செய்து கொடுக்குமாறு கேட்டார். இதில் என்ன தவறு உள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்