எதிர்க்கட்சிகள் கூட்டணியை அறிவித்தது முதல் பா.ஜ.க. பயத்தில் நடுங்குகிறது - மம்தா பானர்ஜி
|எதிர்க்கட்சிகள் கூட்டணியை அறிவித்தது முதல் பா.ஜ.க. பயத்தில் நடுங்குவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன. நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' (இந்திய வளர்ச்சி கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து பேசினார்.
அப்போது அவர், "கலவரம், வன்முறை, மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமே பா.ஜ.க.வின் வேலை. அவர்கள் தீர்க்கமான பதிலைப் பெறுவார்கள். தேர்தலில் அவர்களுக்கு (பாஜக) எதிராக வாக்களித்து மக்கள் பழிவாங்குவார்கள். இந்திய வளர்ச்சி கூட்டணி போரை எதிர்கொள்ளும்" என்றார்.
தொடர்ந்து, மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு சில மாதங்களுக்குள் கவிழும் என பா.ஜ.க. எம்.பி. சாந்தனு தாக்கூர் பேசியது குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, "அவர்களிடம் (பாஜக) ஒரு டம்ளரை கவிழ்க்கச் சொல்லுங்கள். பின்னர் எங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கலாம். விரைவில் மத்தியில் ஆட்சி கவிழும் என்பதை அவர்கள் உணர வேண்டும். நேற்றிலிருந்து (எதிர்க்கட்சிகள் கூட்டணியை அறிவித்தது முதல்) பா.ஜ.க. பயத்தில் நடுங்குகிறது" என கூறினார்.