< Back
தேசிய செய்திகள்
மிரட்டல் வந்ததாக குற்றச்சாட்டு: டெல்லி பெண் மந்திரிக்கு பா.ஜனதா நோட்டீஸ்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மிரட்டல் வந்ததாக குற்றச்சாட்டு: டெல்லி பெண் மந்திரிக்கு பா.ஜனதா நோட்டீஸ்

தினத்தந்தி
|
4 April 2024 1:49 AM IST

பா.ஜனதாவில் சேரும்படி மிரட்டல் விடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக டெல்லி மந்திரி அதிஷிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசிய டெல்லி கல்வி மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி, பா.ஜனதாவில் சேருங்கள் அல்லது ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என்று தனக்கு மிரட்டல் வந்ததாக பரபரப்பு குற்றம் சாட்டினார். மேலும் தான் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாகவும் அதிஷி தெரிவித்தார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷிக்கு பா.ஜனதா அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சச்தேவா, "பா.ஜனதாவில் சேரும்படி மிரட்டல் விடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்கு பகிரங்க மன்னிப்புக் கோரி அதிஷிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதிஷி தன்னை யார், எப்படி, எப்போது அணுகினார் என்பதற்கான ஆதாரங்களை வழங்கத் தவறிவிட்டார். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதனால்தான் அவர்கள் விரக்தியில் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவரை இதிலிருந்து தப்பிக்க விட மாட்டோம். பா.ஜனதா குறித்த தவறான, அவதூறான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட கருத்துகளை அதிஷி திரும்ப பெறாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்