மக்களவையில் ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் எதிர்ப்பு
|மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுடெல்லி,
மக்களவையில், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். ராகுல் காந்தி பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான தாக்குதலுக்கு அரசியல் சாசனம் உள்ளானது. இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே. கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனது எம்.பி. பதவியையும், வீட்டையும் பாஜக அரசு பறித்தது. அரசமைப்பை நாங்கள் பாதுகாத்துள்ளோம். அதிகாரத்தை விட மேலானது ஒன்று இருக்கிறது.அதிகாரத்தை விட உண்மையை நம்புபவன் நான். இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை வெறுப்பு குறித்து மட்டுமே பேசுகின்றனர். பிரதமர் மோடியோ, பா.ஜனதாவோ இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல என்றார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:- இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல் முயற்சிக்கிறார். ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் மீதான தாக்குதல்" என்றார்.