அனைத்து அமைப்புகளையும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி விட்டன - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
|தேர்தல் கமிஷன், நீதித்துறை மீது நிர்பந்தம் அனைத்து அமைப்புகளையும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை கைப்பற்றி விட்டன என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
சண்டிகார்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகிறது. நேற்று அங்குள்ள ஹோஷியார்பூரில் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாட்டில் இன்று அனைத்து அமைப்புகளையும் பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் ைகப்பற்றி விட்டன. அனைத்தும் அவற்றின் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டன. ஊடங்கள் மீது நிர்பந்தம் செலுத்தப்படுகிறது. தேர்தல் கமிஷன், நீதித்துறை ஆகியவை மீதும் நிர்பந்தம் செலுத்தப்படுகிறது.
முன்பெல்லாம் ஒரு கட்சிக்கும், இன்னொரு கட்சிக்கும் இடையே மோதல் நடக்கும். ஆனால், தற்போது பா.ஜனதா கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் நடக்கிறது. அதனால், வழக்கமான ஜனநாயக நடைமுறைகளே காணாமல் போய்விட்டன.
பஞ்சாப் மாநிலம், பஞ்சாப்பில் இருந்துதான் ஆளப்பட வேண்டும். டெல்லியில் இருந்து ஆளப்படக்கூடாது. டெல்லியில் இருந்து இயக்கப்படுவதை பஞ்சாப் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு சொல்லிக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.