சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜக இன்று போராட்டம்
|மூடா முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் நடைபெற உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் கூறியுள்ளார்
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
'காங்கிரசின் நடை-ஊழலை தேடி' என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஊழல் கறை படியாதவர் அல்ல. கவர்னர் வழக்கு தொடர அனுமதி வழங்கி இருப்பதை காங்கிரஸ் வரவேற்று இருக்க வேண்டும். ஆனால் கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது சரியல்ல. மூடா விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க இந்த அரசு அனுமதி அளிக்கவில்லை. இதில் இருந்து தற்காத்து கொள்ள தப்பி ஓடிவிட்டது.
மூடா விவகாரத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை, கையெழுத்து போடவில்லை என்று சித்தராமையா சொல்கிறார்.சித்தராமையா சட்டத்தை மதிக்க வேண்டும். துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்றை பேசுகிறார். அடுத்து யார் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்பது காங்கிரஸ் சம்பந்தப்பட்ட விஷயம். மூடா முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று பாஜக போராட்டம் நடத்தும்" இவ்வாறு அவர் கூறினார்.
மூடா முறைகேடு:
கர்நடகா மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் முதல் மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று சித்தராமையா விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தை யைமப்படுத்தி சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.