கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்
|சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு,
மூடா 'முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் முதல்-மந்திரி சித்தராமையா தொடர்ந்த ரிட் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டின் முன்பாக நேற்று முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 'மூடா' நில முறைகேடு விவகாரத்தில் நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், என் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தராமையா இல்லத்தின் முன்பு ராஜினாமா செய்ய கோரி சில பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் சித்தராமையா இல்லத்தின் முன்பு சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.