பிரதமர் மோடி குறித்த அவதூறு கருத்து: பாகிஸ்தானுக்கு எதிராக பா.ஜனதா போராட்டம்
|பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு எதிராக உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிலாவல் பூட்டோ
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக பிலாவல் பூட்ேடாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று பா.ஜனதாவினர் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் நேற்று நடந்த இந்த போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
உருவ பொம்மை எரிப்பு
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள், அங்கிருந்து ஹஸ்ரத்கஞ்ச் வரை பேரணியாக சென்றனர். இதில் பிலாவல் பூட்ேடாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாநில தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பிலாவல் பூட்டோவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
முன்னதாக மதுராவில் நேற்று முன்தினம் பா.ஜனதாவினர் நடத்திய போராட்டத்திலும் பிலாவலின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குஜராத்தில் போராட்டம்
இந்த நிலையில் குஜராத்தின் ராஜ்கோட், வதோதரா, காந்திநகர், போடாத், மகிசாகர், ஜுனாகத் உள்பட பல இடங்களில் நேற்று பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மாநில யுவ மோர்ச்சா தலைவர் பிரசாந்த் கோரத் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர், பின்னர் பாகிஸ்தான் மந்திரிக்கு எதிராக மனு ஒன்றை கவர்னரிடம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோரத், 'பிலாவல் பூட்டோ கருத்து, பிரதமர் மோடியை மட்டுமின்றி முழு நாட்டையும் அதன் மக்களையும் அவமதிக்கும் செயலாகும். எனவே அவருக்கு எதிராக பா.ஜனதா தொண்டர்களும், குடிமக்களும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்' என தெரிவித்தார்.
பா.ஜனதா கண்டனம்
முன்னதாக பாகிஸ்தானை பிச்சைக்காரர் என வர்ணித்த மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீல், பிரதமருக்கு எதிரான பூட்டோவின் கருத்துக்கு ஒட்டுமொத்த உலகும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது எனக்கூறினார். பிரதமருக்கு எதிரான இத்தகைய கருத்துகளை இந்திய மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.
இதற்கிடையே பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிலாவல் பூட்டோவின் கருத்துகள் மிகவும் இழிவானவை, அவதூறானவை மற்றும் கோழைத்தனமானவை. அவர் அதிகாரத்தில் நீடிக்கவும், பாகிஸ்தான் அரசை காப்பாற்றவும் இவ்வாறு கூறியுள்ளார்' என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.