ஜார்கண்ட் அரசுக்கு எதிராக ராஞ்சியில் பா.ஜ.க.வினர் போராட்டம் - போலீஸ் தடியடி
|ஜார்கண்ட் மாநில தலைமைச் செயலகம் முன்பு பா.ஜ.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மை, ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. அறிவித்தது. அதன்படி இன்று ஜார்கண்ட் மாநில தலைமைச் செயலகம் முன்பு பா.ஜ.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புக்களை அகற்றி தலைமைச் செயலகம் நோக்கி சிலர் செல்ல முயன்றனர். அவர்களை தடுக்க போலீசார் முயன்ற போது இருதரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தைக் கலைக்க போலீசார் முயன்றனர். சிலர் போலீசார் மீது தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்படுவதைத் தடுக்க போலீசார் அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.