கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
|டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார்.
இதையடுத்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த 'ரிட்' மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலக வேண்டும் எனக்கோரி, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அருகே பா.ஜ.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றனர்.
இதையடுத்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.