< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதல்
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதல்

தினத்தந்தி
|
14 March 2023 4:03 AM IST

ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதலில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் சுற்றுப்பயண்ம மேற்கொண்டார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய ஜனநாயகத்தின் தற்போதைய நிலை குறித்து பேசினார்.

அப்போது அவர், இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வருவதாகவும், தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தும் முழு அளவிலான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் இந்த உரை பட்ஜெட் தொடரின் 2-வது அமர்வின் முதல் நாளான நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும் புயலை கிளப்பியது.

ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

மக்களவை காலையில் கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களுக்கு முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எழுந்து ராகுல் காந்தியின் உரை விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர், ராகுல் காந்தி வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்ததாகவும், இழிவுபடுத்த முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு இந்த அவை கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவை கேட்டுக்கொண்ட அவர், தனது உரைக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ராஜ்நாத் சிங் உரைக்கு முன்னதாகவே பா.ஜனதா எம்.பி.க்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டவாறே இருந்தனர். பின்னர் ராஜ்நாத் சிங் உரையை தொடர்ந்து இன்னும் அதிகமாக கோஷமிட்டனர்.

அவையில் கூச்சல், குழப்பம்

இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரசை சேர்ந்த எம்.பி.க்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர். அவர்கள் அவையின் நடுப்பகுதிக்கு சென்று பா.ஜனதாவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் காலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்தது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசினார். இந்தியா, ஜனநாயகத்தின் தாய் எனவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

அவையில் கூச்சல், குழப்பம் அதிகரிக்கவே, மக்களவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

அதானி விவகாரம்

பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் பா.ஜனதா, காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையேயான மோதல் நீடித்தது.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதாவினரும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறே இருந்தனர்.

இரு தரப்பிலிருந்தும் சில எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதியிலும் முகாமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் அமளி

இதற்கிடையே மாநிலங்களவையும் ராகுல் காந்தியின் லண்டன் உரை விவகாரத்தில் முடங்கியது.

காலையில் அவை கூடியதும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் எழுந்து, இந்திய ஜனநாயகத்தை அவமதித்ததற்காக ராகுல் காந்தி அவைக்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினார். அவசர நிலை காலத்தில்தான் இந்திய ஜனநாயகம் அபாயத்தில் இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, இந்த அவையின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அவைக்கு அழைப்பது கண்டனத்துக்குரியது என சாடினார்.

மேலும், வெளிநாடுகளில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகளையும் அவர் நினைவுகூர்ந்து குற்றம் சாட்டினார்.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு

இதற்கு பா.ஜனதா எம்.பி.க்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடனே காங்கிரஸ் உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷமிட்டதால் அவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவையை பிற்பகல் 2 மணி வரை அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் ஒத்திவைத்தார்.

பின்னர் மீண்டும் கூடியபோதும் நிலைமை மேம்படவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல் நீடித்தது.

இதனால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக ஜெக்தீப் தன்கர் அறிவித்தார்.

மேலும் செய்திகள்