பா.ஜ.க.வில் இருந்து காங்கிரசுக்கு தாவிய அரியானா எம்.பி.
|அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியிலான கருத்துவேறுபாடுகள் காரணமாக பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்ததாக பிரிஜேந்திர சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக களப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பிசியாக உள்ளனர். அதேசமயம், அதிருப்தி காரணமாக கட்சி தாவும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அந்த வரிசையில் அரியானா மாநிலம் ஹசார் தொகுதியின் எம்.பி. பிரிஜேந்திர சிங், பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். மல்லிகார்ஜுன கார்கே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக், தீபக் பபாரியா ஆகியோர் பங்கேற்றனர்.
அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியிலான கருத்துவேறுபாடுகள் காரணமாக பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்ததாக பிரிஜேந்திர சிங் தெரிவித்தார். விவசாயிகளின் பிரச்சினை முதல் அக்னிவீரர்கள், மல்யுத்த வீரர்கள் போராட்டம் வரை பல விஷயங்களில் பா.ஜ.க.வுடன் கருத்து வேறுபாடு இருந்ததாகவும், காங்கிரஸ் குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஹிசார் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரிஜேந்திர சிங் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.