பா.ஜனதா எம்.பி., காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
|ஜனதா தரிசன நிகழ்ச்சியில் மோதல் சம்பவம் தொடர்பாக பா.ஜனதா எம்.பி., காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கோலார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோலார் தங்கவயல்
அரசு நிகழ்ச்சியில் ேமாதல்
ேகாலார் டவுனில் கடந்த 25-ந்தேதி ஜனதா தரிசனம் என்னும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.
இந்த விழாவில் பங்காருபேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணசாமி மற்றும் கோலார் பா.ஜனதா எம்.பி. முனிசாமி ஆகியோரும் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில் விழா மேடையில் மந்திரி பைரதி சுரேஷ் முன்னிலையில் நாராயணசாமி எம்.எல்.ஏ., முனிசாமி எம்.பி. இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. முனிசாமி எம்.பி. நாராயணசாமி எம்.எல்.ஏ.வை தாக்க பாய்ந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு நாராயணா, முனிசாமி எம்.பி.யை தடுத்து நிறுத்தியதுடன், அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் தன்னை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே தள்ளியதாக போலீஸ் சூப்பிரண்டு நாராயணா மீது நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் கர்நாடக கவர்னர் ஆகியோரிடம் முனிசாமி எம்.பி. புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அரசு விழாவில் தன்னை அவதூறாக பேசி தாக்க முயன்றதாக முனிசாமி எம்.பி. மீது நாராயணசாமி எம்.எல்.ஏ கோலார் கல்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதேபோல், நாராயணசாமி மீது முனிசாமியும் கல்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார்கள் குறித்து கல்பேட்டை போலீசார் முனிசாமி எம்.பி. மற்றும் நாராயணசாமி எம்.எல்.ஏ. மீது தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.