பணக்காரர்களின் பல கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யும் போது, ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்கினால் அரசு திவாலாகி விடுமா? பா.ஜனதாவுக்கு, டி.கே.சிவக்குமார் கேள்வி
|பணக்காரர்களின் பல கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யும் போது, ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்கினால் அரசு திவாலாகி விடுமா? என்று பா.ஜனதாவுக்கு, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடக மாநிலம் கலபுரகியில் நேற்று கிரகஜோதி திட்ட தொடக்க விழாவில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
பல கோடி ரூபாய் தள்ளுபடி
சட்டசபை தேர்தலில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சொன்னபடி நடந்து கொண்டுள்ளோம். ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு 5 இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். இந்த இலவச திட்டங்களை செயல்படுத்துவதால் கர்நாடக அரசு திவாலாகி விடும் என்றும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர்களும் கூறி வருகின்றனர்.
பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பல கோடி ரூபாய் கடனை மத்திய பா.ஜனதா அரசு தள்ளுபடி செய்து வருகிறது. அவர்கள் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாயை பா.ஜனதா அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு நிதிச்சுமை ஏற்படவில்லையா?, மத்திய அரசு திவாலாகிவிட்டதா?. இவற்றை எல்லாம் மறைத்து விட்டு ஏழைகளுக்கு இலவச திட்டங்களை செயல்படுத்துவதால், கர்நாடகம் திவாலாகி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.
இலவசங்களால் அரசு திவாலாகி விடுமா?
காங்கிரஸ் அரசின் 5 இலவச திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் பா.ஜனதாவினர் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தது குறித்து பா.ஜனதாவினர் பேசாமல் இருப்பது ஏன்?. ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்குவதாலும், இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாலும், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதாலும் அரசு திவாலாகி விடுமா?
மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் ஏழை மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு தான் ஏழை மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் அமல்படுத்தி உள்ள 5 இலவச திட்டங்களை மற்ற மாநிலங்களில் செயல்படுத்தவும், அந்த மாநில அரசுகள் முன்வந்துள்ளன. இது கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.