பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 2 மாதம் சிறை - பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு
|பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் தெரிவித்ததாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 2 மாதம் சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெங்களூரு:
பா.ஜனதா எம்.எல்.ஏ.
கர்நாடக சட்டசபையில் பெங்களூரு சிக்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் உதய் கருடாச்சார். பா.ஜனதா கட்சியை சேர்ந்த அவர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் தெரிவித்ததாகவும், தன் மீதான வழக்குகளை மூடிமறைத்ததாகவும் கூறி பெங்களூரு 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
2 மாதம் சிறை
அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில், தகவல்களை மூடிமறைத்த வழக்கில் உதய் கருடாச்சார் எம்.எல்.ஏ.வுக்கு 2 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தவிட்டார்.
அவருக்கு கோர்ட்டு உடனடியாக ஜாமீன் வழங்கியதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.