சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு; பா.ஜனதா எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை - முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே வலியுறுத்தல்
|சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளது. பரசப்பா என்பவர், தனது மகனை சப்-இன்ஸ்பெக்டர் ஆக்க பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேரம் பேசியுள்ளதாகவும், ரூ.30 லட்சத்திற்கு பேசி முடித்து முதல்கட்டமாக ரூ.15 லட்சம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த பேரம் பேசிய வீடியோ உள்ளது. ஆனால் கூறியபடி வேலை கிடைக்காததால், பணம் கொடுத்த நபர் தனக்கு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த எம்.எல்.ஏ., பணத்தை அரசிடம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதற்கு என்ன அர்த்தம்.
அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் இந்த பேர விவகாரம் பகிரங்கமாகியுள்ளது. போலீசார் இதுவரை பேரம் பேசிய எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு அனுப்பவில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தைரியம் இருந்தால் பேரம் பேசிய எம்.எல்.ஏ.விடம் விசாரணை நடத்தட்டும். இதுகுறித்து தன்னிடம் உள்ள ஆவணங்களை போலீசாருக்கு வழங்குவேன் என்று பசவராஜ் தடேசூர் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.