'மதத்தின் பெயரால் பா.ஜனதா அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது' - பிரியங்கா காந்தி
|பல தலைமுறைகளாக ரேபரேலி தொகுதிக்கு எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பிரியங்கா காந்தி கூறினார்.
ரேபரேலி,
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா, தொகுதி முழுவதும் சூறாவளியாக சுற்றி வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள உஞ்சாகரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரியங்கா கலந்து கொண்டு பேசினார். அப்போது மதத்தின் பெயரால் மக்களை தவறாக வழிநடத்துவதாக மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பல தலைமுறைகளாக ரேபரேலி தொகுதிக்கு எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், இந்த தொகுதி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர். ஆனால் தற்போதைய மத்திய அரசு மக்களுக்கு பொறுப்புக்கூறும் நிலையில் இல்லை. அவர்கள் மதத்தின் பெயரால் மக்களை தவறாக வழிநடத்தி வெறும் ஓட்டுகளை மட்டும் பெறுகிறார்கள்.
மோடி அரசின் தவறான கொள்கைகளால் அனைத்து பொருட்களும் நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது. கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை இன்று ரூ.1,100. இதே சிலிண்டர் முன்பு ரூ.400-க்கு விற்கப்பட்டது. அப்போது பா.ஜனதா தலைவர்கள் சிலிண்டர்களை தூக்கிக்கொண்டு ரோட்டுக்கு வந்தனர்.
இன்று 70 கோடி பேர் வேலையின்றி இருக்கிறார்கள். செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. சாலைகள், மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. ஏழை எளிய மக்கள், இளைஞர்கள், விவசாயிகள் போன்றோர் துயரத்தில் உள்ளனர். மோடி அரசில் அங்கம் வகிக்கும் ஒரு மந்திரியின் மகன் தனது வாகனத்தை விவசாயிகள் மீது ஏற்றி கொலை செய்திருக்கிறான். இன்று மோடி அரசு செல்வந்தவர்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறது, ஆனால் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.
பெரும் முதலாளிகளுடன் பிரதமர் மோடி கூட்டு சேர்ந்துள்ளார். அதனால்தான் நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள் போன்றவற்றை பெரும் முதலாளிகளுக்கு வழங்கி வருகிறார்.
ஒரு தவறான தடுப்பூசியை தயாரித்த ஒரு நிறுவனத்திடம் இருந்து மோடி அரசு ரூ.52 கோடி நன்கொடை பெற்று இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்படும். விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, வேலை உரிமை மற்றும் வினாத்தாள் கசிவு போன்றவை தொடர்பாக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்" என்று பிரியங்கா கூறினார்.