பா.ஜனதாவினர் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
|அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் சுர்ஜேவாலா கலந்து கொள்ளவில்லை என்றும், இதுபற்றி பா.ஜனதாவினர் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளிக்கட்டும் என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
துமகூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சுர்ஜேவாலா பங்கேற்கவில்லை
பெங்களூரு வளர்ச்சி, மாநகராட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்று இருந்தார்கள். இந்த கூட்டத்திற்கும் சுர்ஜேவாலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை சந்திக்க மட்டுமே வந்திருந்தார். காபி குடித்துவிட்டு நானும், சுர்ஜேவாலாவும் புறப்பட்டு செல்ல இருந்தோம். அது தான் நடந்தது. அதிகாரிகள் கூட்டத்தில் சுர்ஜேவாலா பங்கேற்கவில்லை. அவர் வந்து எனது அருகில் அமர்ந்தார். பி.டி.ஏ. அதிகாரிகளுடன் பேசிவிட்டு செல்லலாம் என்று மட்டுமே சுர்ஜேவாலா இருக்கும் போது கூறினேன். சுர்ஜேவாலா என்னை சந்திக்க வந்து அமர்ந்திருந்த போது மந்திரி ஜமீர் அகமதுகான் எடுத்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு இருந்தார்.
நான் தலையிட போவதில்லை
இந்த விவகாரத்தில் பா.ஜனதாவினர் கவர்னரை சந்தித்து புகார் அளிக்க போவதாக கூறியுள்ளனர். பா.ஜனதாவினர் கவர்னர் ஆகட்டும், யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளிக்கட்டும். காங்கிரசும், பா.ஜனதாவும் சமரச அரசியல் செய்து வருவதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. கூறி இருக்கிறார். நான் பா.ஜனதாவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட போவதில்லை.
இது அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும். சமரச அரசியல் குறித்து பா.ஜனதா கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.