இந்தி எந்த வகையிலும் உதவாது, ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பாஜக விரும்பவில்லை - ராகுல்காந்தி தாக்கு
|வெளிநாடுகளுக்கு சென்றால் இந்தி எந்த வகையிலும் உதவாது, பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பாஜக தலைவர்கள் விரும்பவில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பயணத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த யாத்திரை ராஜஸ்தானில் உளது. இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
ஆங்கில மொழியை பள்ளிகளில் கற்பிப்பது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால், அவர்களின் பிள்ளைகள் ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளிகளுக்கு சென்று படிக்கின்றனர். ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்று ஆங்கிலம் கற்பது பாஜக தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. மக்களை ஏழைகளாக வைத்திருக்கவே ஆங்கிலம் கற்பதை பாஜக தடுக்கிறது.
நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி மற்றவர்களுடன் பேச வேண்டும் என்றால், இந்தி மொழி உங்களுக்கு உதவாது. எனவே ஆங்கிலம் படியுங்கள். எங்களுக்கு, இங்கிருக்கும் ஏழைகளின் பிள்ளைகள் அமெரிக்கர்களுடன் போட்டி போட்டு, அவர்களின் மொழியிலேயே வெல்ல வேண்டும். ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்க வேண்டும், பெரிய கனவுகள் மற்றும் வயல்களில் இருந்து வெளியேறுவதை பாஜக விரும்பவில்லை:
எனவே ஆங்கிலம் படித்து வேறு துறைகளுக்கு செல்லுங்கள். ராஜஸ்தானில் 1700 ஆங்கில வழிக்கல்வி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.